உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் கங்கையாற்றில் மாசு 30 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வாரணாசியில் மார்ச் 24, ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் 5 இடங்களில் நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
அதில் மாசுபாட்டின் அளவு 25 முதல் 30 விழுக்காடு வரை குறைந்திருப்பதும், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு 20 முதல் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுதொழில், குடிசைத் தொழில் நிறுவனங்கள், வாகனப் பணிமனைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகள் முற்றிலும் நின்றுபோனதும் இதற்கு ஒரு காரணம் என ஆய்வு மையத் தலைவர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் சுடுகாடுகளில் உடல்களை எரித்துச் சாம்பலை ஆற்றில் கரைப்பது 40 விழுக்காடு குறைந்துள்ளதும் ஆற்றின் தூய்மைக்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மீட்டர் ஆழத்தில் நீந்தும் மீன்களைக் காணும் அளவுக்கு நீர் தெளிவாக உள்ளதாகவும் திரிபாதி தெரிவித்துள்ளார்.