இந்தியாவில் ஒரே நாளில் ஆயிரத்து 876 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 531பேர் உயிரை, கொரோனா காவு வாங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணி, முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட போதிலும் உயிரிழப்பும் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 324 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவால், ஒரே நாளில், 31 பேர், மரணத்தை தழுவி உள்ளனர். இதுவரை, 2 ஆயிரத்து 302 பேர் குணமாகி, வீடு திரும்பி உள்ளனர்.
மஹாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 200பேர் பாதிக்கப்பட, அங்கு உயிரிழப்பு 223 ஆக உள்ளது. குறிப்பாக, மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்தது.
டெல்லியில் ஆயிரத்து 893 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 42 என்ற அளவை எட்டி உள்ளது.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 604 ஆக உயர்ந்தது. அங்கு உயிரிழப்பு 58 ஆக அதிகரித்தது.
தமிழகத்தை பொறுத்தவரை, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு எதுவும் நிகழாததால், பலி எண்ணிக்கை 15 என்ற நிலை நீடித்து வருகிறது.
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 431 ஆகவும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 407 ஆகவும் உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேசம் - 974 பேரும், தெலங்கானாவில் 809 பேரும் பாதிக்கப்பட, ஆந்திராவில் 647 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளா - 400 , கர்நாடகா - 390 , ஜம்மு - காஷ்மீர் - 341 , மேற்கு வங்காளம் - 310,ஹரியானா - 225 மற்றும் பஞ்சாப்பில் 202 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆக மொத்தம், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 116 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 531 ஆக அதிகரித்தது.