புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் தயாரிப்புக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்பூங்காவை அமைக்கத் தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி மின்னுற்பத்தி செய்வதற்கான கருவிகளில் 85 விழுக்காடு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் தொழிற்பூங்காக்களை அமைக்க 50 முதல் 500 ஏக்கர் வரை நிலங்களை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு மாநிலங்களையும் துறைமுகங்களையும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகமும், மத்தியப் பிரதேச, ஒடிசா மாநில அரசுகளும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகப் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை இந்தத் தொழிற்பூங்காக்களுக்கு ஈர்ப்பதன் மூலம், உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்யவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.