இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 480ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த மேலும் 43 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 480ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 991 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி 14 ஆயிரத்து 378ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 3 ஆயிரத்து 323 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 201 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் டெல்லி 2ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3ஆவது இடத்திலும், மத்திய பிரதேசம் 4ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 5ஆவது இடத்திலும் உள்ளன.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்த ஆயிரத்து 992 பேர் இதுவரை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 331 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர்த்து, 11 ஆயிரத்து 906 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.