உள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை உரிய மருத்துவச் சோதனைக்குப் பின் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என மகாராஷ்டிர அரசிடம் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் நகரங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உணவு, குடிநீர், இருப்பிடம் இன்றித் துன்பப்படுவது குறித்த வழக்கு நீதிபதி ரவி தேஷ்பாண்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களின் ஊருக்கு அனுப்பி வைப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், இதனால் அரசின் சுமை குறையும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவச் சோதனை செய்த பின்னரே அவர்களைச் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.