இந்தியாவில் கொரோனாவால் 170 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 76 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் எனப்படும் மாவட்டங்களாக 170 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இதில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 207 மாவட்டங்கள் அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.