உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் கொரோனா தடுப்புப் பணியாளர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியதில் மருத்துவர் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.
மொரதாபாத்தின் நவாப்புராவைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் தொடர்பில் இருந்த 4பேரைத் தனிமைப்படுத்துவதற்காகக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மருத்துவர்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது வீட்டு மாடிகளின் மீது நின்றும் தெருவில் நின்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் மருத்துவர் ஒருவரும் பணியாளர்கள் இருவரும் காயமடைந்தனர்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், வன்முறையாளர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.