ஏழை மக்களின் உணவுக்காக ஆறு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் திரட்டிய 11 வயதுச் சிறுமிக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழை எளியோர் ஏராளமானோர் உணவின்றியும் செலவுக்குப் பணமின்றியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ரித்தி ஏழை எளியோருக்கு உணவு வழங்குவதற்காக நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்களிடம் ஆறு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
இந்தப் பணத்தைக் கொண்டு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் எண்ணெய், சோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட தொகுப்பை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கியுள்ளார். சிறுமியின் செயலைப் பாராட்டியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதை நினைவூட்டும் வகையில் இது அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.