இந்தியாவில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டும், பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்களாலும், வெளிநாட்டினராலும், அவர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கும் என, இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதுவரையில், கொரோனா பெருந்தொற்று, சமூக தொற்றாக மாறவில்லை.
நாட்டிலேயே, அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில், ஒரே நாளில் 350 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2684ஆக உயர்ந்துள்ளது. 18 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 178ஆக அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான மும்பையில், கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில், 204 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 11 உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. மும்பையில் மட்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 1753ஆக உள்ளது.
மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, நாட்டின் தலைநகரை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி, இரண்டாம் இடம் வகிக்கிறது. புதிதாக 51 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1561ஆம் அதிகரித்துள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மூன்றாவது மாநிலமாக திகழும் தமிழ்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1204ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே, முதல் கொரோனா பாதிப்பை எதிர்கொண்ட கேரளாவில், தொற்றுநோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 384ஆக சரிந்துள்ளது.தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 260ஆக உள்ளது.
தனித்திருத்தல் மூலம், கொரோனாவை மிக எளிதில் கட்டுப்படுத்த முடியும் என உலகிற்கே இந்தியா உதாரணமாக மாறியுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதோடு, தொற்றுநோய் தடுப்பு பணிகளும், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.