தெற்கு ரயில்வே 573 ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றியமைத்துள்ளது. கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோரைத் தனிமையில் வைக்கப் பல்வேறு மண்டலங்களில் ஐயாயிரம் ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்றது.
தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஆகியவற்றில் இந்தப் பணி நடைபெற்று வந்தது. திட்டமிட்டபடி 573 ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணியைத் தெற்கு ரயில்வே முடித்துள்ளது. இந்தத் தனிமை வார்டுகளில் காலால் மிதித்து மூடிகளைத் திறக்கும் 3 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமை வார்டுக்கும் இடையில் நெகிழியாலான திரைச்சீலை உள்ளது. படுக்கையின் அருகில் ஆக்சிஜன் உருளையை மாட்டும் வசதி உள்ளது. பெட்டியில் உள்ள ஒரு கழிவறை குளியலறையாக மாற்றப்பட்டுள்ளது.