பஞ்சாபின் பாட்டியாலாவில் காவல் உதவி ஆய்வாளரைக் கையை வெட்டியது தொடர்பாக 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாட்டியா சோதனைச் சாவடியில் வாகனத்தைத் தடுத்த காவலர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங்கின் கை வெட்டுப்பட்டுத் துண்டானது. அவர் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைக்காகச் சண்டிகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து மண்வெட்டிகள், துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அமரீந்தர் சிங், சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.