இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 678 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ், இதுவரை நாட்டில் சமூக தொற்றாக பரவவில்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், எனினும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்ட 16 ஆயிரத்து 2 மாதிரிகளில் பூஜ்யம் புள்ளி 2 சதவீதம் பேருக்கே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், வைரஸ் பரவலின் விகிதம் இந்தியாவில் அதிக அளவில் இல்லை என்றும் லாவ் அகர்வால் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் இந்தியாவில் தற்போது 3 கோடியே 28 லட்சம் இருப்பில் உள்ளதாகவும், அதனைக் கொண்டு ஏப்ரல் மாதம் வரையிலான தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
அதே போன்று இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 ஆயிரத்து 743 பேர் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தாமு ரவி தெரவித்தார்.
இதனிடையே, ஏப்ரல் மாதத்தில் விழாக்கள் நடைபெற அனுமதி அளிக்காமல், ஊரடங்கு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.