நெருக்கடியான காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ஒன்றாக இணைந்து கொரோனாவை வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு வழங்கும் முடிவிற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அசாதாரணமான சூழ்நிலைகளில், நண்பர்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் டிரம்ப் ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்த உதவியை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கே உதவும் பிரதமர் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
தாங்கள் கேட்டதைக் கொடுத்து அசத்திய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும், இதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, இதுபோன்ற காலகட்டங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன என அதிபர் டிரம்ப் கூறுவதில் முழுமையாக உடன்படுவதாக பதிவிட்டுள்ளார்.
இந்திய-அமெரிக்க நட்புறவு முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது என்றும், கொரோனாவுக்கு எதிரான மனிதகுலம் நடத்தும் போரில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும், நாம் ஒன்றாக இணைந்து இதில் வெற்றிபெறுவோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.