சிறு, குறு வணிகர்கள் பயன்படும் நோக்கில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது நிதித் தொகுப்பை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தகர்களுக்கு சந்தித்த இழப்பின் அளவை மதிப்பிட்ட பின்னர், பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தனி நிதித்தொகுப்பு அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், கடந்த மாதம், இந்தியா 1.7 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
இது நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க நேரடி பணப் பரிமாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு விரைவில் இரண்டாவது நிதித் தொகுப்பை அறிவிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள அந்த அதிகாரி, அதன் மூலம் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன் பெறுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், 75ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்ட பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மீதான மேல்வரி மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் இந்த நிதி ஒதுக்கப்படும் என்றும், தொழில்துறையினருக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மூலதனத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மிகக் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.