மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதைத் தவிரக் கொரோனா பரவலைத் தடுக்க வேறு ஒரு வழியுமில்லை என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சீனாவின் ஊகானில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இப்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் மனச்சோர்வு ஏற்படும் என்பதைத் தான் புரிந்துகொண்டுள்ளதாகவும், எனினும் கொரோனாவை வெல்ல வீடுகளிலேயே தங்கியிருப்பதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.