இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது.
உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும், தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக நாடு முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கடந்த 24 நேரத்தில் மட்டும் 773 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் மகாராஷ்டிராவில், புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 60 பேரையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மும்பை தாராவி பகுதியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் 44 பேருக்கும், தானேவில் 9 பேருக்கும், நாக்பூரில் 4 பேருக்கும், அகமத்நகர், அகோலா, புல்தானாவில் தலா ஒருவருக்கும் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 690 பேரும், டெல்லியில் 576 பேரும், தெலங்கானாவில் 364 பேரும், கேரளாவில் 336 பேரும், உத்தரபிரதேசத்தில் 326 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள 576 பேரில் 35 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்