நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 76 சதவிகிதம் பேர் ஆண்கள் என்றும் 24 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால், நோயாளிகளில் 47 சதவிகிதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரிவித்தார். நாட்டில் தொற்று உறுதியாகி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள 4067 பேரில், 1455 பேர் நிசாமுதீன் தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு தொடர்புடையவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா இறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரை 63 சதவிகிதம் பேர் 60 வயதையும் தாண்டியவர்கள் என்றார் அவர். கொரோனா ஒழிப்புக்காக தேசிய சுகாதார திட்ட நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ஏற்கனவே 1100 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று மேலும் 3000 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் லவ் அகர்வால் தெரிவித்தார்.