அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா பரவியதை அடுத்து, நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை கண்காணிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், உயிரியல் பூங்கா ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில், அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்றியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, உயிரியல் பூங்கா நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவும், சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் விலங்குகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் இருக்கிறதா, நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நோய்வாய்ப்படும் விலங்குகளை தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விலங்குகளை பராமரிப்பவர்கள் முகக்கவசம், கையுறை இல்லாமல் விலங்குகளை நெருங்க அனுமதிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான கொரில்லா, சிம்பன்சி, குரங்குகள், பூனைகள் உள்ளிட்ட பாலூட்டிகளின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.