கொரோனாவை முழுபலத்துடன் எதிர்ப்பது குறித்து அமெரிக்கா, ஸ்பெயின்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஹேஸ் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, முழு பலத்துடன் கொரோனாவை எதிர்க்க ஒன்றுபட்டு நிற்பதாக உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மோடி, கோவிட் 19 நோய்க்கு எதிராக இருநாடுகளும் முழு பலத்தை பிரயோகிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்புக்கு யோகா மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகளையும் பரிசோதிக்க இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. பின்னர் தனித்தனியாக பிரேசில் , ஸ்பெயின் நாட்டுத் தலைவர்களுடனும் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிர்ச்சேதங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மோடி, தற்போதைய சூழலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு , ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரான், குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் உள்ளிட்டோருடன் தொலைபேசி மூலம் பேச்சு வாரத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.