நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், செல்போன் டார்ச்சுகளை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளக்குகளின் ஒளியேந்தி, கொரோனா இருளை விரட்ட அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைப்பதால், மின்தொகுப்பில் ஏற்றஇறக்கங்கள் உருவாகி, மின்சாதனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலை தெரிவித்திருந்தனர்.
ஆனால், இது தவறான தகவல் என்று மத்திய மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் தெரு விளக்குகளையோ வீடுகளில் கம்ப்யூட்டர், ஃபேன், ஏசி, ரெஃப்ரிஜெரேட்டர் உள்ளிட்ட சாதனங்களையோ அணைக்குமாறு கூறவில்லை என்றும், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிய வேண்டும் என்றும் மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.