குடிநோயாளிகளுக்காக மது விற்பனை செய்ய வகை செய்யும் கேரள அரசின் உத்தரவு பேரழிவுக்கான செயல் எனக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு கொண்டு வருவோருக்கு மட்டும் அளவாக மது விற்பனை செய்யக் கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிக் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மது குடிக்க முடியாத வெறுப்பில் 8 பேர் தற்கொலை செய்துகொண்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் உத்தரவு இடையூறாகவும், பேரழிவுக்கான செயலாகவும் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், மது விற்பதற்கான உத்தரவை 3 வாரங்களுக்குச் செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.