டெல்லி நிசாமுதீனில் தப்லிக் ஜமாத் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி நிசாமுதீன் மையம் இயங்கி வரும் 6 மாடிகள் கொண்ட கட்டிடம், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கும் வசதி கொண்டது. சமையலறை, நூற்றுக் கணக்கானோர் உணவு அருந்தும் அரங்கம் ஆகியவற்றை கொண்டது. இங்கு நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளதால், நோய்த்தொற்று அபாயம் பெரும் எண்ணிக்கையில் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
அந்த வகையில், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ள இந்த கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, துப்புரவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் உயரதிகாரிகளுடன், நிசாமுதீன் மையம் குறித்து வீடியோகான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினர்.
பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோதும், 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது மிகப்பெரிய குற்றம் என சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.