வங்கிகளிடம் பெற்ற கடன்களை முழுவதும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகத் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் விஜய் மல்லையா பெற்ற கடன், வட்டியும் முதலுமாக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக்கடனாக நிலுவையில் உள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், வங்கிகளிடம் பெற்ற கடனை முழுவதும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வங்கிகளும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமலாக்கத்துறையும் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரியுள்ளார். முழு அடைப்பால் தனது ஆலைகளின் செயல்பாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியில்லை என்றாலும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.