கொரோனா வைரஸ் உள்வட்டாரப் பரிமாற்றமாகவே உள்ளதாகவும், சமூகத் தொற்றாகவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று என்பது பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என்ற வரம்பில் உள்வட்டார மற்றும் வரையறுக்கப்பட்ட பரிமாற்றமாகவே உள்ளதாகவும், அதன் படி சந்தேகத்துரியவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், உண்மையிலேயே சமூகப் பரவலை அரசு உணர்ந்தால் அதை ஒப்புக்கொண்டு அறிவிக்கும் என்றும் ஆனால் அந்த நிலை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கொரோனா சமூகத் தொற்றாக மாறி பரவினால் குறிப்பிட்ட நோயாளி யார் மூலமாக தொற்றுக்கு ஆளானார் என்பதையே கண்டுபிடிக்கவோ, தனிமைப்படுத்தவோ முடியாது என்றும் தெரிவித்தார்.