இந்தியாவில் கொரோனா சமூகத் தொற்றின் ஆரம்ப நிலை தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைப் பொறுத்தவரையில் 4 கட்டங்கள் உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா தொற்றோடு வந்து விடுவது முதல் கட்டம். உள்ளூர் அளவில் கொரோனா பரவுவது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டம் என்பது, கொரோனா பரவுவது சமூகத் தொற்றாக மாறிவிட்டதைக் குறிக்கும்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள், கொரோனா பாதித்த நபரின் சுற்றுப்புறங்களில் இல்லாதவர்களுக்கும் நோய்த்தொற்று கண்டறியப்படும். அதாவது கொரோனா இருப்பது தெரியாத நபர்கள், அதை சமூகத்திற்கு தங்களை அறியாமல் பரப்பிக் கொண்டிருப்பார்கள்.
இந்தியாவில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும், இன்னும் இரண்டாவது நிலையிலேயே இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.
வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளாதவர்களுக்கும், எங்கிருந்து தொற்றியது என்பதைக் கண்டறிய முடியாத வகையில், கொரோனா பரவுவது கடந்த வாரத்தில் அதிகரித்தபோதும் மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இவ்வாறு கூறிவந்தது.
இந்தியாவில் கொரோனா வரைஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அமைப்பு என்ற வகையில், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுவதே அதிகாரப்பூர்வமான நிலைப்பாடாக உள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, SOP எனப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கும் ஆவணம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா வைரஸ் பரவல், உள்நாட்டளவில் பரவுவது மற்றும் வரம்புக்குட்பட்ட சமூகத் தொற்று என்ற கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் பரவுவது, இரண்டாவது கட்டத்திலும், மூன்றாவது கட்டத்தை எட்டிய ஆரம்ப நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டத்திற்கான வழிமுறைகளின்படி, சந்தேகத்திற்கிடமான அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
6 மாநிலங்களில், பல இடங்களில் சமூகத் தொற்று உள்ளதாகவும், எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிய முடியாத கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது, சமூகத் தொற்று கட்டம் தொடங்கி விட்டது என்பதையே காட்டுவதாகவும் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுபற்றி தாம் இப்போது கருத்து சொல்ல முடியாது என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கும் என்றும், மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்லின் தொற்றுநோயியல் துறை தலைவர் Raman Gangakhedkar தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிப்ரவரி பிற்பகுதியிலேயே சமூகத் தொற்று தொடங்கிவிட்டது என வேலூர் சிஎம்சி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
இதுபற்றி விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பதைவிட, வைரஸ் எந்த கட்டத்தில் பரவினாலும் அதை எதிர்கொள்வதற்கு முன்தயாரிப்போடு இருக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் முன்பு பணியாற்றிய விஞ்ஞானியான ஜான் தெரிவித்துள்ளார்.