வயதானவர்களையே கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குவதாக வந்த தகவல்களையடுத்து மூத்த குடிமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு காரணம் பெரும்பாலோர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் என்றும் முதியவர்கள் உடனடியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் முதியோருக்கான வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முதியவர்கள் வீட்டை விட்டு ஒருபோதும் வெளியில் வரக்கூடாது என்றும்,வழக்கமான உடல் நலப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், உங்கள் அறுவை சிகிச்சைகளை சில காலம் தள்ளிப்போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
கோவில்கள், சந்தைகள் போன்ற இடங்களுக்கு போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீட்டில் தியானம் , உடற்பயிற்சி புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடலாம் என்றும், உறவினர்கள், நண்பர்களுடன் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாக பேசலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று துப்புரவுத் தொழிலாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா பரவிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலைகள், நடைபாதைகள் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளர்கள் மாப், நைலான், ஸ்கரப்பர் போன்றவற்றை தனித்தனியாகப் பயன்படுத்தி கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது தனி செட்டை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான கையுறைகள், முகக்கவசங்கள் போன்றவற்றையும் துப்புரவுத் தொழிலாளர்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளி இடங்களை விட சூரிய வெளிச்சம் படாத காற்று குறைவாக உள்ள வீட்டின் அறைகள் கொரோனாவை பரப்புவதில் ஆபத்தானவை என்பதால், வீட்டின் படிக்கட்டு கைப்பிடிகள் , வாயில் கதவுகள், கதவின் கைப்பிடிகள், மின்சார ஸ்விட்சுகள், லிப்ட்டின் பொத்தான்கள் , காலிங் பெல் போன்ற கைகளால் தொடக்கூடிய எந்த ஒரு பொருளையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகத்தால் ஆன கைப்பிடிகள், பாதுகாப்பு பூட்டுகள், சாவிகள் போன்றவற்றை 70 சதவீத ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், ரப்பர் காலணிகள், கையுறைகள், முப்பரிமாண முகக்கவசங்கள் போன்றவற்றை தூய்மைப்பணிகளின் போது அணிய வேண்டும் என்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காண :
https://www.youtube.com/watch?v=yZd8bPTfYOg&list=PL1a9DHjZmejE-Ep2PAu2OR8HBfLP0BLIk&index=3
https://www.mohfw.gov.in/pdf/AdvisoryforElderlyPopulation.pdf