ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆயுஷ் என்ற மத்திய அரசின் துறையின் கீழ் வருகின்றன.
இத்துறைக்கான பிரத்தியேக அமைச்சகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆயுஷ் மூலம் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் கிருமி நாசினிகளை அதிகளவில் தயாரித்துத் தரவேண்டும் என்று அவர்களிடம் மோடி கேட்டுக் கொண்டார்.
வீட்டிலேயே யோகா பயிற்சி செய்வதை பிரபலப்படுத்துமாறும் அவர் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்று உலகமே பதறிக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டு வைத்தியத்தில் மருந்து இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து உரிய ஆதாரங்களுடன் மெய்ப்பிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.