நாடு தழுவிய ஊரடங்கில் இருந்து அனைத்து வகையான விவசாய பணிகளுக்கும் விலக்களித்து மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வேளாண்மையும் இன்றியமையாப் பணிகளின் கீழ் வருவதால், வேளாண்மை தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நாடு தழுவிய ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது. கடந்த 24ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் இதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள், விதைப்பு, நடவு, பாசனம், அறுவடை, விளைபொருட்களைச் சந்தைப் படுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் தடையின்றி ஈடுபட முடியும். உரம், பூச்சிக்கொல்லி, விதைகள் விற்பனை செய்யும் கடைகளும் திறந்திருக்கும். வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு அங்காடிகள், உணவுப் பொருள் மொத்த விற்பனை, சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வணிகத்தில் ஈடுபட முடியும். வேளாண்மை, அதைச் சார்ந்த துணைத் தொழில்கள் மூலம் நாட்டில் பாதிப்பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.