நாடு முழுவதும் 21 நாட்களுக்கான மிகப்பெரிய முதல் ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று முதல் 21 நாட்களுக்கு பிரதமர் மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு காலத்தில் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி, மருந்துக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ரேசன் கடைகள், அம்மா உணவகம், பழக்கடைகள், பால் விற்பனை நிலையம் போன்றவை வழக்கம் போல் செயல்படும்.
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம், செல்போன் , ஊடகம், கேபிள் டிவி சேவைகள் நீடிக்கும். காவல்நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், சிறை நிர்வாகம், மின்சார நிலையங்கள், குடிநீர் கழிவுநீர் அகற்றும் சேவைகள் நீடிக்கும்.
மருத்துவமனைகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லை. பெட்ரோல் பங்குகள், எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை தொடரும். ஓட்டல்களில் உணவு பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. தங்கும் விடுதிகள் வெளியூர் ஆட்களுக்காக செயல்படும். பங்குச் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும்.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், அவசர தேவைகள் தவிர காரணமின்றி நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கால் டாக்சிகள், ஆட்டோக்கள் ,ரயில்கள், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்படுவதுடன், இன்றியமையாப் பணிகளுக்கான துறைகள் மட்டும் செயல்படும். கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், கலாசார நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மத ரீதியான பொது வழிபாடுகள் ,விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை 21 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரசை பரவாமல் தடுக்க யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு இந்த 21 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.