மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் சிவராஜ் சிங் சவுகான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
அதன் பின்னர் 107 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜகவின் சவுகான் முதல்வராக பதவி ஏற்றார். இன்று சட்டப்பேரவை கூடியதும், தமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவைக்கு வராத நிலையில், பாஜகவின் 107 உறுப்பினர்களுடன் சேர்ந்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. 61 வயதான சிவராஜ் சிங் சவுகான் 4ஆவது முறையாக மத்திய பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.