டெல்லி, அரியானா மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வெளிமாநில வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கொரோனா பரவலைத் தடுக்க டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, அரியானா மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளிலும் 144 தடையுத்தரவு நடைமுறையில் உள்ளது.
மக்கள் கூட்டமாகக் கூடவும் மதவழிபாடு, போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், உணவுப்பொருட்கள், பால்பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசாத்பூர் காய்கறிச் சந்தையில் பழங்கள், காய்கறிகளை விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவாரக் காலத்துக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
டெல்லியில் இருந்து புறநகர்ப் பகுதிகளான குருகிராம், நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகியவற்றுக்கு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி, பால், பழங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மருத்துவர்கள், ராணுவத்தினர், ஊடகங்கள், அரசு அலுவலர்களின் வாகனங்களும் எல்லை தாண்டிச் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றன. இதனால் டெல்லி - கவுதம்புத்தா நகர் இடையிலான எல்லைச் சோதனைச் சாவடியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்குக் காத்து நிற்கின்றன.
டெல்லிக்கு வரும், டெல்லியில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதுடெல்லி ரயில் நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
டெல்லியில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஊபர், ஓலா நிறுவனங்கள் வாடகைக் கார் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் பொதுப்போக்குவரத்து, தனியார் பேருந்துகள், வாடகைக் கார், ஆட்டோ ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க வாடகைக் கார் போக்குவரத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ஊபர், ஓலா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.