கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், 2, 8 மற்றும் 14 ஆகிய நீதிமன்றங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், எந்த அவசர வழக்காக இருந்தாலும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர்கள் வாதிடும்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வேறு அறையில் அமர்ந்து விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 31ம் தேதி வரை டெல்லி முடக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.