நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223-ஆக அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்தியுள்ளன.
சீனாவிலிருந்து உருவான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் இதுவரை 20 மாநிலங்களில் பரவியுள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, பஞ்சாப் ஆகிய இடங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டிலேயே கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 69 வயது பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் வதோதராவில் தலா ஒருவர் வீதம் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஸ்பெயின் நாடு சென்று திரும்பியவர் ஆவார். இன்னொரு நபர், அமெரிக்கா மற்றும் பின்லாந்து நாடுகளில் பயணம் செய்து திரும்பியவர் ஆவார்.
இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் 50 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்று 173ஆக இருந்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளது. இதில் 191 பேர் இந்தியர்கள் என்றும், 32 பேர் வெளிநாட்டினர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ, நொய்டா, கான்பூரில் மால்கள் மூடப்பட்டுள்ளன. அந்த 3 நகரங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் சேவை 22ம் தேதியன்று ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்துக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தொழிற்சாலைகளுக்கு 31ம் தேதி வரை வீடுகளில் இருந்தபடி பணியாற்ற ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து பொதுமக்கள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 9190131 51515 என்ற வாட்ஸ் அப் என்ற எண்ணை மத்திய அரசு தொடங்கியுள்ளது