கேரள மாநிலத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்க்குச் சலுகைத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். வருமான இழப்பால் பாதிக்கப்படுவோருக்குக் கடன் வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நியாய விலைக்கடைகளில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மின்சாரம், குடிநீர்க் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட ஒரு மாதக் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.