மத்திய அரசின் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் வரும் 48 லட்சம் ஊழியர்களில் 31.1 லட்சம் பேர் நேரடியாக மத்திய அரசால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மத்திய அரசின் நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பணிபுரிபவர்கள்.
இந்த 48 லட்சம் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் குரூப் பி மற்றும் சி பிரிவை சேர்ந்தவர்களே. அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2.4 லட்சம் பேர் குரூப் பி அதிகாரிகள். அதிலும் 60 சதவீதம் பேர் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் ஆவர். இதேபோல, 27.7 லட்சம் பேர் குரூப் சி ஊழியர்கள் ஆவர்.
இந்நிலையில், குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் அன்றாடம் அலுவலகம் வந்து பணியாற்றினால் போதும். மீதமுள்ள 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்த, துறைத் தலைவர்களுக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.