இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூக பரிமாற்றம் மூலம் (community transmission) கொரோனா பரவக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே ஒருவர் கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில், டெல்லியிலிருந்து திரும்பிய ஆம்பூரை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. வெளிநாடு பயணம் எதுவும் செல்லாத அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் எனப்படும் சமூக பரிமாற்றம் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது. இந்நிலையில், மும்பைக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இன்று முதல் 31ம் தேதி வரை இந்தியர்கள் 26 ஆயிரம் பேர் திரும்பி வரவுள்ளனர். இதையடுத்து அவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் ஏற்பாடுகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய 4 பேர், மும்பை-டெல்லி ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு கீழிறக்கி விடப்பட்டனர். மும்பையில் இருந்து டெல்லி காரீப் ரத ரயில் புறப்பட்டபோது, அதிலிருந்த பயணிகள், சக பயணிகள் 4 பேரின் கைகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பால்கர் எனுமிடத்தில் ரயில் நிறுத்தப்பட்டு 4 பேரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் பால்கர் மருத்துவ குழுவினர் கட்டுப்பாட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.