மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இன்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று வரை 3 வெளிநாட்டினர் உள்பட 42 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் டெல்லியில் மேலும் 2 பேருக்கும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 பேருக்கும், சண்டீகர், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 15 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து 27 பேருடன் கேரள மாநிலம் 2ஆவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் தலா 17 எண்ணிக்கையுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்த 166 பேரில் 141 பேர் இந்தியர்கள் எனவும், 25 பேர் வெளிநாட்டினர் எனவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர்த்து 15 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.