கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும் 200 கோடி ரூபாயை ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் 14 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடகாவில் தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் மற்றும் கொரோனா கிருமிகள் தாக்குதல் தொடர்பாக கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உள்துறை, குடும்ப நலத்துறை, மருத்துவக் கல்வித்துறை அமைச்சர்கள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும் வெளிநாட்டில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் கண்டிப்பாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் எடியூரப்பா குறிப்பிட்டார்.