கொரோனா தொற்று குறித்த சோதனை நடத்த 72 அரசு ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் 49 ஆய்வகங்கள் இந்த வார இறுதியில் தயாராகி விடும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, கொரோனா தொற்றைப் பொறுத்தவரை இந்தியா இப்போது இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக கூறினார்.
மூன்றாம் கட்டம் எனப்படும் சமுதாய தொற்று இந்தியாவில் இதுவரை உருவாக வில்லை என்று அவர் தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை நடத்துவதற்கான அனுமதி விரைவில் அளிக்கப்படும் என்றார் அவர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் தற்போது 72 ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற அவர், மேலும் 49 ஆய்வகங்கள் இந்த வார இறுதியில் தயாராகி விடும் என கூறினார்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர்கள் வீடுகளில் நோய்த்தடுப்புக் காவலில் வைக்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.அதில் அறிகுறிகள் காணப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிவிரைவு ஆய்வகங்கள் செயல்படுவதாக தெரிவித்த அவர், இதனால் ஒரு நாளில் ஆயிரத்து 400 மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும் என்றார். 10 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.