நீதித்துறையின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்க கிடைத்த வாய்ப்பு என்பதாலேயே மாநிலங்களவை எம்.பி. நியமனத்தை ஏற்றதாக, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
அசாம் தலைநகர் குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை டெல்லி சென்று மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்க உள்ளதாகவும், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து தனது நிலையை விரிவாக விளக்க உள்ளதாகவும் கூறினார்.
தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஏதாவது ஒரு கட்டத்தில் நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டார்.
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் இருப்பதன் மூலம், நீதித்துறையின் பார்வையை முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் பார்வையை புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.