கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வருமாறு சார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பதற்றமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெற்காசியாவில் கொரோனா வைரசை எதிர்கொள்வது குறித்து, சார்க் அமைப்பின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, அனைவரும் ஒன்றிணைந்தால் கொரோனாவை வெல்ல முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம் என்ற போதும் அச்சமடைய வேண்டாம் என்றும் மோடி தெரிவித்தார். மத்தியிலும் நிலைமை எப்படி மாறும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என்றபோதும், இப்பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாராவோம் என்று குறிப்பிட்டார்.
உலக மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட சார்க் பிராந்தியத்தில், 150க்கும் குறைவானவர்களுக்கே கொரானோ பாதிப்பு இருப்பதாக தெரிவித்த அவர், இருப்பினும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் விவரித்தார். இரு மாதங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டதாகவும், படிப்படியாக பயணங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை அணுக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து 1,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மோடி, மற்ற நாட்டவர்களையும் அழைத்து வர இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து சார்க் நாடுகளும் பொது நிதியை உருவாக்க கோரிய மோடி, இந்தியாவின் சார்பில் 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இலங்கை, மாலத்தீவு, ஆப்கன் ஆகிய நாடுகளின் அதிபர்களும், நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகியவற்றின் பிரதமர்களும், பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளரும் காணொலி சந்திப்பில் பங்கேற்றனர்.
இதனிடையே, பிரதமர் மோடியின் சார்க் காணொலி மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ஜாபர் மிர்சா (zafar mirza) தமது பேச்சின் இடையே காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையை எதிர்கொள்ள சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் சார்க் நாடுகள் உதவிகளை வழங்கவேண்டும் என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அங்கு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றும் ஜாபர் மிர்சா கூறியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் நிலைமை பரிதாபகரமானது என்றும் அவர்கள் விமர்சித்தனர்