கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் ஒரு பிரிட்டன் பயணிக்கு கொரானா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த 289 பயணிகளும் இறக்கப்பட்டு பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
18 பேருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்த அந்த நபர்,கொரானா அறிகுறியை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் அவர் மூணாறு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமலேயே தன்னுடன் வந்த 18 பேருடன் எமிரேட்ஸ் விமானத்தில் பிரிட்டன் செல்வதற்காக கொச்சி விமான நிலையத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கொரானா பாதிப்பு உறுதியானதை அடுத்து மூணாறு அதிகாரிகளின் தகவலின் பேரில் விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.