திங்களன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை மெய்ப்பிக்குமாறு மத்தியப் பிரதேச அரசுக்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பேரவைத் தலைவரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர். இவர்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரையும் பதவியில் இருந்து ஆளுநர் லால்ஜி தாண்டன் விடுவித்தார்.
இந்த 6 பேரின் பதவி விலகலைப் பேரவைத் தலைவரும் ஏற்றுக்கொண்டார். இதனால் பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 228இல் இருந்து 222ஆகக் குறைந்துள்ளது. இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும் வகையில் திங்களன்று நம்பிக்கை வாக்கு கோருமாறு கமல்நாத் அரசுக்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்ப்பூர் விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விமானம் மூலம் போபால் வந்தனர். பதவி விலகல் கடிதம் கொடுத்த சிந்தியாவின் ஆதரவாளர்கள் பெங்களூர் விடுதியில் கர்நாடகக் காவல்துறையின் பாதுகாப்புடன் தங்கியுள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரியானாவின் குர்கானில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போபாலில் உள்ள மாரட் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விடுதி வளாகம் முழுவது துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூர் விடுதியில் பாஜகவினரால் தங்கவைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு வர வேண்டும் என ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.