பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இதில், பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் மூலம் உறுதி செய்வதை கட்டாயமக்குவது, சிறார் ஆபாச படங்கள் தொடர்பான விடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான நடைமுறைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
மேலும், புதிய விதிகளின்படி அனைத்து மாநில அரசுகளும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை துளியும் அனுமதிப்பதில்லை என்பதை அடிப்படையாக கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டுமின்றி காவல்துறையினருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடார்பாக, அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 30 நாள்களுக்குள் இழப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், இதில் போக்சோ நீதிமன்றங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.