கேரள மாநிலத்தில் கொரானா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் காலவரையின்றி (adjourned sine die) ஒத்திவைக்கப்பட்டது.
கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கேரளாவில் 17 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட 200 முக்கிய மையங்கள் இன்று முதல் 31ம் தேதி வரை மூடப்படுவதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு மாநில பேரிடராக (state disaster ) அறிவிக்கப்பட்டிருப்பதுடன், சட்டப்பேரவை கூட்டத் தொடரும் இம்மாதம் 29ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநிலம் முழுவதும் பள்ளிகள், திரையரங்குகளை இம்மாதம் 31ம் தேதி வரை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் கொரானா நிலவரத்தை கையாள 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்குக் கொரானா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குத் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தாலி, பிரான்ஸ், குவைத் உள்ளிட்ட 6 நாடுகளுக்கான விமானச் சேவைகளை ஏப்ரல் 30 வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிந்த பின்னரே விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் விமானப் பயணம் மேற்கொள்வது பெருமளவு குறைந்ததால் ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்தாலி, பிரான்ஸ், தென்கொரியா, குவைத், ஸ்பெயின், இலங்கை நாடுகளுக்கான விமானச் சேவைகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பயணச்சீட்டு ரத்துக்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரானா அச்சுறுத்தல் காரணமாகப் போதிய பயணிகள் இல்லாததால் விமான நிறுவனங்களே சேவைகளை ரத்து செய்துள்ளன. பயணிகளும் விமானப் பயணத்தை ரத்து செய்துள்ளார்கள். இதுபோல வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குச் சில நாடுகள் தடை விதித்துள்ளன.
இத்தகைய சூழலில் பயணச்சீட்டு ரத்துக்கான கட்டணம், தேதி மாற்றத்துக்கான கட்டணம் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.