கொரோனா பீதி இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் கிராமம் ஒன்றில் புதிதாக கல்யாணமாகி வரும் மாப்பிளையை, ஹோலியில் சிறப்பாக கவனிக்கும் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள Vida என்ற சிறிய கிராமம், கொரோனா பீதி இருந்தாலும் ஹோலி கொண்டாட்டத்தை கைவிட விரும்பவில்லை. எனவே 90 வருடங்களாக நடந்து வரும் பாரம்பரிய கொண்டாட்டத்துடன் களைகட்டியது Vida கிராமம்.
இந்த கிராமத்தில் கொண்டாடப்படும் ஹோலியின் முக்கிய பாரம்பரியம் என்ன தெரியுமா? புதிதாக கிராமத்திற்கு வாக்கப்பட்டு வந்த புது மாப்பிளையை கழுதை சவாரி செய்ய வைப்பது தான். இந்த கழுதை சவாரி கிராமத்தின் நடுவில் இருந்து துவங்கி, அப்பகுதியில் இருக்கும் அனுமன் கோவிலில் முடிவடைகிறது. கழுதை சவாரிக்கு பின்னர் கிராமத்தின் புதிய மருமகனுக்கு கிராம மக்கள் நிறைய புத்தாடைகளை பரிசாக வழங்குகிறார்கள்.
இது பற்றி கூறும் கிராமவாசிகள், 90 ஆண்டுகளுக்கு முன்பு கிராமவாசிகளால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆனந்த்ராவ் தேஷ்முக் என்பவரால் இந்த பாரம்பரியம் தொடங்கப்பட்டது. ஆனந்த்ராவின் மருமகனை வைத்து தான் இந்த கழுத்தை சவாரி பாரம்பரியம் தொடங்கியது. அது முதல் தற்போது வரை 90 ஆண்டுகளாக தொடர்கிறது என்று கூறியுள்ளனர்.
கழுதை சவாரியிலிருந்து எஸ்கேப்பாக கிராமத்தின் புது மருமகன் நினைத்தால் கூட முடியாதாம். ஏனென்றால் இந்த பாரம்பரியம் நடக்க 4 நாட்கள் இருக்கும் போதே ஊர் மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு விடுவாராம் புதுமருமகன்.
இந்த ஆண்டு விடா கிராமத்தின் ஹோலி கழுதை சவாரி பாரம்பரியத்தில் மாட்டிக்கொண்டவர் தத்தாத்ரே கெய்க்வாட் என்ற புது மருமகன் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.