கோடை காலத்தின் வெப்பம் கொரானா வைரஸை கண்டிப்பாக கொன்றுவிடும் அல்லது பலவீனப்படுத்தும் என தவறான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் சராசரி வெப்பநிலை அளவு 8.72 டிகிரி செல்சியஸை தாண்டிய பிறகே, கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது என சீனாவின் சன்யாட்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஆய்வு வெளியானது.
மேலும் இந்தியாவில் கோடைக்காலம் தீவிரமடையும்போது கொரானா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என பொத்தாம் பொதுவாக சில கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பது வைரஸ் பரவும் வேகத்தை குறைக்கலாம் என்றாலும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு கோடைக்காலத்தை உலக நாடுகள் நம்பியிருக்கக் கூடாது என தொற்றுநோயியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சளி மற்றும் ஃபுளூ காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல, பருவநிலையை சார்ந்த வைரசாக கொரானா இருக்க வாய்ப்பில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.