ஹோலிப் பண்டிகை இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக சற்று களையிழந்து காணப்பட்ட போதும் அதன் பாரம்பரிய உற்சாகம் வடமாநிலங்களுக்கு பரவியுள்ளது.
இன்றும் நாளையும் இந்தியா ஹோலிப் பண்டிகையை கொண்டாடுகிறது. ஹோலிகா என்ற அரக்கியை கண்ணன் அழித்த நாளாக இதற்கு புராணத்தில் விளக்கம் உள்ளது.
தீமையை நன்மை வெல்வதைக் குறிக்கும் வகையில் கண்ணனும் ராதையும் வண்ணம் இறைத்து விளையாடியதைப் போல் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை இறைத்து உடலை செயற்கையான வண்ணங்களால் நிறம் மாற்றுவதே ஹோலிப் பண்டிகை.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல இடங்களில் முகக் கவசம் அணிந்தபடி மக்கள் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
ஹோலிக்குப் பயன்படுத்தப்படும் வண்ணங்களால் ஏற்படக் கூடிய தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளால் இயற்கை வண்ணப் பொடிகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலர்கள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் இயற்கை வண்ணங்கள் ரசாயன பாதிப்பை குறைப்பதாக கூறுகின்றனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு இதற்காகவே தயாரிக்கப்படும் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையும் களை கட்டியது.
இனிமையும் வண்ணமும் இல்லங்களில் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பிக்கை கொண்ட இந்திய பண்பாட்டுச் சூழல் ஹோலிப் பண்டிகையால் மேலும் தன்னை செழுமைப்படுத்திக் கொண்டுள்ளது.