பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்பது அப்பட்டமாக தெரிந்த போதும் உலக நாடுகள் கண்களை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இவ்வாறு அதிரடியாக வினவியிருக்கிறார். எல்லைத் தாண்டிய தீவிரவாதம் குறித்து ஐநா. மனித உரிமை ஆணையம் கண்மூடிக் கிடப்பது ஏன் என்றும் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.
ஐநா பதிவில் உள்ள ஆவணங்களையே புரட்டி பார்த்தாலே, தீவிரவாதிகள் எங்கிருந்து வருகிறார்கள் எனத் தெரியும் என ஜெய்சங்கர் சுட்டிக் காட்டினார். எவர் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் நாடு எங்காவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர், அப்படிப்பட்ட நாடு எதுவுமில்லை என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவே கொண்டு வரப்பட்டது என உறுதிபடக் கூறினார்.