கொரானா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், குறைந்த விலையில் வேதிப்பெயரிலான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், 700 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் மருந்தக வாரம் மார்ச் 1 முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது தீபா ஷா என்ற பெண், தனது வாழ்க்கை சம்பவங்களை கண்ணீர் மல்க எடுத்துரைத்தபோது, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
கொரானா குறித்து பேச்சுவாக்கில் கேள்விப்படுவதையோ வதந்திகளையோ நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர், எந்த சந்தேகமாக இருந்தாலும் மருத்துவர்களை அணுகி விளக்கம் பெறுமாறு அறிவுறுத்தினார்.
கொரானா விவகாரத்தில் மருத்துவர்களின் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய மோடி, கைகுலுக்குவதை தவிர்க்குமாறும், கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை மீண்டும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மக்கள் மருந்தகங்கள் மூலம் மருந்துகளை பெறுவதாகவும், பொதுமக்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்துவதற்கு இந்த திட்டம் உதவுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.